இருட்டு உலகம்



தனிமையின்
நிழலில்
பெருமூச்செறிந்தபடி
வெறிச்சோடிக் கிடக்கிறது
வாழ்க்கை

விடிய முன்னும்
விடிந்த பின்னும்
துயரங்களை
சுவாசித்து
சொட்டுச் சொட்டாய்
உயிரிழக்கிறது
வாழ்தல் மீதான
நம்பிக்கை

வலிகளின்
பிடிமானங்களில்
கவனமாய் செருக்கப்பட்டிருக்கிறது
உடலும், உயிரும்.....

நிலவு தொலைந்த
இருட்டு உலகாய்
இன்னும் புலப்படாமல்
மனிதர்கள்

நிறைவேறாத
ஆசைகளின்
நீள்வட்டப் பாதையில்
தறிகெட்டுத் தவிக்கின்றன
நகரும் வினாடிகள்

விழிநீரின்
விம்பங்களில்
அப்பட்டமாய்த் தெரிகின்றன
புன்னகைகளின்
புதைகுழிகள்

குற்றுயிரின் உளறலாய்
விளங்கவும் முடியாமல்
விலக்கவும் தெரியாமல்
உணர்வு என்ற பெயரில்
சில ஊசல்கள்.....

நீளும் ரணங்களின்
அழுத்தத்தில் புதைந்து
இன்னுமின்னும்
உயிர்வாழ
எனக்கு விருப்பமில்லை
மரணத்தின் திசைநோக்கி
நடக்கிறேன்

மிக மிகத்
தொலைவில்
என்னை வரவேற்றுக்
காத்திருக்கிறது அது!

நிந்தவூர் ஷிப்லி, தென்கிழக்கு பல்கலை, இலங்கை

1 comments:

LakshmanaRaja said...

//விழிநீரின்
விம்பங்களில்
அப்பட்டமாய்த் தெரிகின்றன
புன்னகைகளின்
புதைகுழிகள//

மிக அருமை ..
வாழ்த்துக்கள்