அந்திமாலை பிரசவிக்கும் கவிதைகள்


அந்திமாலைச் சூரியனின்

தேய்ந்து கொண்டிருக்கும் வெம்மை

எதையெல்லாமோ சொல்ல முனைந்து

இறுதியில் எதையுமே சொல்லாமல்

இருட்டின் நிழலுக்காய்

தன்னை விட்டுக்கொடுக்கிறது


தீராத தனிமையின் வலியில்

தனக்குத்தெரிந்த மொழிகளின்

ஊமை வாசகங்களை

அங்கொன்றும் இங்கொன்றுமாய்

பறைசாற்றுகின்றன பறவைகள்


நட்சத்திரக் கண்களினுடே

பூமியைக் கண்காணிக்கத் தொடங்கிவிட்டது

கறுப்பாகிக் கொண்டிருக்கும்

நீல வானம்


வானவெளிப் பரப்பில்

சுவடுபதிக்கும்

காற்றின் மென்சலனமும்

நிர்மூலமாகிக் கொண்டிருக்கிறது..


இரவின் நீண்ட நிழலில்

இளைப்பாறத் தொடங்கியிருக்கின்றன

மரங்களும் ஆறுகளும்


ஒவ்வொரு அந்திமாலையும்

நமக்குள் எழுதிச்செல்லும்

மொழிகளைத் தாண்டிய

கவிதைகள் ஏராளம் ஏராளம்


அவைகளை நாம் வாசிக்கப் போவதில்லை

என்று தெரிந்தும் தினந்தோறும்

அது எழுதிக் கொண்டேயிருக்கிறது

வெவ்வேறு கவிதைகளை

நம்மீது..!-


நிந்தவூர் ஷிப்லி, தென்கிழக்கு பல்கலை, இலங்கை mailto:shibly591@yahoo.com


இன்னொரு பிரிவை நோக்கி


கடைசியில்

நிகழ்ந்தே விட்டது

உன்னோடான

பிரிவும்.......


எதிர்பார்த்ததுதான்

இருந்தும்

இத்தனை

சீக்கிரமா?


நீ

அடிக்கடி சொல்லும்

‘பிறகு சொல்கிறேன்’

என்பதை

சொல்லாமலே

போய்விட்டாய்


திருவிழாவில்

குழந்தையைத் தொலைத்த

தாயொருத்தியின்

பதை பதைப்பும்

அழுகையும்

எனக்கு இன்னும்

சில காலம்தான்......


பிறகு

இன்னொரு

பிரிவை நோக்கிய

உறவின் மீதான பயணம்

இயல்பாகவே நிகழ்ந்துவிடும்


!- நிந்தவூர் ஷிப்லி, தென்கிழக்கு பல்கலை, இலங்கை mailto:shibly591@yahoo.com

ஏமாற்றங்களின் நெடும் பயணம்

தொடரும் ஏமாற்றங்களின்
நெடும் பயணத்தை
மீண்டும் புதுப்பித்திருக்கிறாய்
நீ………..

விடு
குட்டக்குட்ட குனியும்
என் இயலாமையை
சொல்ல வேண்டும்

வரங்களை சாபங்களாக்கிய
தேவதை உனக்காகவா
நான் கடுந்தவம் புரிந்தேன்…?

எனக்கு நிழல் தரும்
என்றெண்ணிய உன்
வார்த்தைகள்
சுட்டெரிக்கும் சூரியனாய்
பொசுக்குகிறது
என்னையும்
மனசையும்…..

பௌர்ணமி வானில்
நீ என்ன
வேண்டுமானாலும்
செய்..
ஆனால்
அமாவாசை வானின்
நட்சத்திரங்களை மட்டும் பிடுங்கி விடாதே…………

-நிந்தவூர் ஷிப்லி தென்கிழக்கு பல்கலை இலங்கை

Captured while maiden book was released...




தொலைதூர அழுகுரல்

பூச்சாண்டி வருவதாக
அன்னை ஊட்டிய
ஒரு பிடிச் சோற்றின்
உயிர்ச்சத்தில்
உதயமானது என் கிராம வாழ்வு

புழுதிக்காற்றின்
மண்வாசனையில்
எத்தனை முறை
நுகர்ந்திருக்கிறேன்
தாய் மண்ணின் சுகந்தத்தை....

மழை நாள் பொழுதுகளில்
தெருவெல்லாம் திரண்டோடும்
அழுக்கு நீரில் கால்
நனைத்து
கழுவியிருக்கிறேன் நினைவுகளை....

நிலாச்சோறு
திருட்டு மாங்காய்
சைக்கிள் விபத்து
முதல் காதல்
இன்னும் எத்தனை நினைவுகள்
என் உயிரோடு ஒட்டியபடி....

அத்தனையும் துறந்து
உலக வரைபடத்தில் மட்டுமே
தாய்நாட்டை காண முடியுமான
ஒரு தேசத்தில் நான்....

பணம் சம்பாதித்துக் கொண்டே
இருக்கிறது
என் உடல்

உயிர் மட்டும்
இன்னும் என் தெருமுனையின்
பனைமரத்தடியில்.....!


நிந்தவூர் ஷிப்லி, தென்கிழக்கு பல்கலை, இலங்கை mailto:shibly591@yahoo.com

வாழ்க்கை

விடையில்லாத
விடுகதை
இது
சில சமயம்
கடல்நீர்
சில சமயம்
கானல் நீர்

இதன் விரல்
நுனியில்தான்
மனிதர்கள்
பொம்மைகள்.....

கனவு,
ஆசை,
காதல்,
பாசம்,
உறவு
பரிவு
என்றெல்லாம்
ஏராளம் ஏராளமமாய்
இதன் பிடியில் முகமூடிகள்
விளையாடு களமாய்,
நாடக மேடையாய்,
களியாட்ட அறையாய்
எப்படியோ
பாவித்தாக வேண்டும் இதை

கருவறையில்
விழித்த பின்
நிஜங்களின் ராஜ்ஜியமாய்...
கல்லறையில்
உறங்குமுன்
போலிகளின் நாட்டியமாய்
இரு முகங்கள் இதற்கு.

ஆயினும்,
சூன்யத்தின் மறுபெயர்தான்
வாழ்க்கை என்பதை
எப்போதுமே உணர்வதில்லை நாம்!
சாகும் பொழுதைத்தவிர......

நிந்தவூர் ஷிப்லி, தென்கிழக்கு பல்கலை, இலங்கை


கருக்கலைப்பு


ஜனனங்களுக்காய்

படைக்கப்பட்ட

கருவறைகள்..

இன்றோ

மரணங்களுக்கான

கல்லறையாய

புதிய பரிமாணம்


உயிரணுக்களின்

உயிர்கள்

அணுவணுவாய்

கொல்லப்படுகிறது

மருத்துவச் சித்ரவதைகளுடன்....


தொப்புள்கொடிகளே

தூக்குக்கயிறுகளாகின்றன

இந்தக்கருக்கலைப்பில்....“


புக்களை தீயிட்டு

எரிப்பதைப்போல”

என்பதை தவிர

வேறெந்த உவமைகளும்

பொருந்தப் போவதில்லை

இந்த அகால மரணங்களுக்கு...


மனிதாபிமானம்

செத்துப்போய்விட்டதை

பகிரங்கமாய் பறைசாற்றுவதற்கா

சிசுக்கொலைகள்...?


உண்டான பிறகு

சிதைப்பதை விட்டுவிட்டு

உண்டாகும் முன்

சிந்தியுங்கள்

ஏனெனில்நீங்கள்

சிதைப்பது உயிர்களை அல்ல

இவ்வுலகின்

நாளைய விடிவை !


நிந்தவூர் ஷிப்லி