இருள் சூழ்ந்ததொரு அடர்ந்த வனாந்தரத்தின்
அசையும் ஒரு இலையென
எவர் கண்ணிலும் எட்டுவதாயில்லை
என் கண்ணிலிருந்து உகுக்கும்
பலப்பல கண்ணீர்த்துளிகளும் கனவின் கலைதலும்...

தனிமைத்தீயில் யதேச்சையாய் சிக்குண்ட
என் விதிக்கப்பட்ட கணங்களிலிருந்து
சிக்கிச்சின்னாபின்னமாகி சாம்பலாகிப்போனது
சில நினைவுகளும் அது சார்ந்த நிதர்சனங்களும்...

மழைநாள் மண்வாசமாய்
உயிரின் வேர்ப்பரப்பிலிருந்து
நினைவுகள் நனைக்கும் ஞாபக எச்சங்களின்
எழில் கோலங்கள் மொத்தமும்
முற்றுப் "புள்ளி" என்றாகிப்போன பின்
எதற்கிந்த வேசம்...?எதற்கிந்த சுவாசம்...??

உடைந்து போன புல்லாங்குழல் வழியே
கசியும் ஒரு ஏகாந்த இசையென
காற்றின் சுவடுகள் பற்றி
எங்கெல்லாமோ மிதந்து கொண்டிருக்கிறேன்...

நீளும் திசை வழியே
என் பாதையற்ற பயணம்
கானல் முகங்களில் மோதுண்டு
செய்வறியா பேரதிர்ச்சியுடன்
காகிதக்கப்பலாய் தத்தளிக்கிறது..

சுய கழிவிரக்கம் குறித்தான என்
நிசப்தப்புலம்பல்கள்
ஒரு வசந்தத்தின் பாடலுக்காய்
அழுதபடி தவமிருக்கிறது..

நிர்மூலமான நிகழ்காலத்தின்
மிக மெல்லிய இடுக்குகளில் கசியும்
நம்பிக்கைச்சூரியனும்
மெல்ல மெல்ல ஒளியிழக்கிறது
காலத்தின் கைகள் சுமந்திருக்கும்
இறுகிப்போன விலங்குகளை பார்த்த பின்பு.....

4 comments:

Dr.Naganathan Vetrivel said...

NICE

kajan said...

உடைந்து போன புல்லாங்குழல் வழியே
கசியும் ஒரு ஏகாந்த இசையென.கவிதை சூப்பர்

kuma36 said...

உங்களது கவிதைகள் அனைத்துமே நன்றாக இருக்கின்றது!! இன்னும் பல படைப்புக்களை வெளியிட வாழ்த்துக்கள்.

vennila said...

சுய கழிவிரக்கம் குறித்தான என்
நிசப்தப்புலம்பல்கள்
ஒரு வசந்தத்தின் பாடலுக்காய்
அழுதபடி தவமிருக்கிறது.......////////

ஒரு சென்சிட்டிவ்வான விஷயத்தை..... ரொம்ப மென்மையா முகம் சுளிக்காதவாறு எடுத்து சொல்லி இருகிங்க..... clapsssssss