மிக அண்மையில் பிரபலமாக பேசப்பட்டுக்கொண்டிருக்கும் "ஸ்லம்டக்
மில்லியனர்"என்கிற ஆங்கிலம் கலந்த இந்த ஹிந்தி திரைப்படம் இந்திய
சினிமாவை உலகத்தரம் வாய்ந்ததாக மீண்டும் ஒரு முறை
பறைசாற்றியிருக்கிறது.ஏற்கனவே லகான், ஓம் சாந்தி ஓம், ஜோதா அக்பர் போன்ற
படங்கள் உலகெங்கும் பிரபலமாகி இந்திய சினிமாத்தரத்தை வெகுவாக
திரும்பிப்பார்க்க வைத்தன.ஆனால் எந்தவொரு ஆர்ப்பாட்டமும் இன்றி ஒரு சில
பிரபலங்களை மட்டும் வைத்துக்கொண்டு இந்தப்படம் சாதித்துக்கொண்டிருக்கும்
ஏன் சாதிக்கப்போகும் மைல்கல்கள் ஏராளமோ ஏராளம்.

செலடார் பிலிம்ஸ் தயாரிப்பில் டென்னி போயெல் இயக்கிய இந்தப்படத்தில் துணை
இயக்குநராக லவ்வீன் தண்டலும், திரைக்கதையை சைமன் பபேயும்
வடிவமைத்துள்ளனர்.தயாரிப்பாளராக கிரிஸ்டியன் கொல்ஸனும், நாயகனான ஜமாலின்
இளமைப்பருவ கதாபாத்திரத்தில் தேவ் பட்டேலும், ஜமாலின் சிறுவர்பருவத்தில்
தனய் சேடாவும், துறு துறு குழந்தைப்பருவ கதாபத்திரத்தில் அயூஸ் மகேஸ்
கடேகரும் நடித்திருந்த அதேவேளை நாயகியாக பிடே பிந்தோவும், கௌரவ வேடத்தில்
அனீல் கபூரும், போலீஸ் துப்பறிவாளனாக இர்பானும் பாத்திரமறிந்து
நடித்ததோடு முகம் காட்டாமல் அனைத்து ரசிகர்களையும் இசையால்
கட்டிப்போட்டிருப்பவர் நம் இசைப்புயல் ஏ.ஆர.ரஹ்மான்.


இனி கதையின் விளிம்பிற்கு வருவோம்.படம் ஆரம்பிக்கும்போது பார்வையாளர்களை
நோக்கி ஒரு கேள்வி கேட்கப்படுகிறது.அது இதுதான் "ஜமால் 20 மில்லியனை
எவ்வாறு வெற்றி கொண்டான் ? முதல் விடைத்தெரிவு "அவன் ஒரு
ஏமாற்றுக்காரன்", இரண்டாவது விடைத்தெரிவு "அவன் அதிர்ஸ்டசாலி", மூன்றாவது
விடைத்தெரிவு "அவன் பெரும் அறிவாளி", நான்காவது விடைத்தெரிவு "அது
எழுதப்பட்ட விதி".அதற்கு விடைதான் முழுப்படத்தின் கதையுமே.

ஒரு தெருவோரப்பிச்சைக்காரனான ஜமால் 20 மில்லியனை ஒரு தொலைக்காட்சி
நிகழ்ச்சியில் வென்று விடுகிறான்.அவன் ஏமாற்று வித்தைக்காரனாக இருக்கலாம்
என்று போலீஸ் சந்தேகித்து அவனை கைது செய்து மிகக்கொடுமையாக
விசாரிக்கிறது.பெரும் பெரும் அறிவாளிகளால் வெல்ல முடியாத பரிசை ஒரு
சாதாரண மனிதன் நீ எப்படி வெற்றி பெற்றாய் என்று அதட்டும் போலீசுக்கு
எனக்கு விடைகள தெரிந்திருந்ததால் நான் வென்றேன்" என்று சொன்னதுமே
தியேட்டர் நிமிர்ந்து உட்கார்கிறது.அவனிடம் கேட்கப்பட்ட ஒவ்வொரு
கேள்விக்கும் அவன் எதை அடிப்படையாக வைத்து விடை சொன்னான் என்கிற பாணியில்
விரிகிறது கதை.


உண்மையில் ஜமாலாக நடித்த துறு துறு பையனும் சரி, சிறுவனும் சரி, இளைஞனும்
சரி இயல்பான நடிப்பில் நம்மை கட்டிப்போடுகிறார்கள்.படம் முழுவதும்
யதார்த்தம் நிரம்பி வழிகிறது.ஆரம்பத்தில் காட்டப்படும் கிராமம் அழுக்கு
நிறைந்த சேரிப்பகுதிகளின் உண்மை முகங்களை நமக்கு வெட்ட
வெளிச்சமாகக்காட்டுகிறது.அதேபோல கதையின் வழியே இணைந்து ஓடும்
கதாபாத்திரங்களும் யதார்த்தமாகவவே
வடிவமைக்கப்பட்டிருக்கிறார்கள்.உதாரணத்துக்கு போலீஸ்காரர்களையும் பாதிக்கப்பட்ட சிறுவர்களையும் இடையிடையே வரும் வன்முறைகளையும் கோடிட்டுச்சொல்ல முடியும்.


மில்லியன் பரிசப்போட்டியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஜமாலின் வhழ்வில் நிகழ்ந்த ஒவ்வொரு சம்பவங்களும் விடையாக கோர்க்கப்பட்டிருக்கும் பாணி அற்புதமானது.விடையளிக்கும்போது தனது முகபாவங்களாலேயே நம்மையெல்லாம் நாயகன் வென்று விடுகிறான்.மேலும் பம்பாயில் குழந்தை கடத்தல்கள் விபச்சாரம் கேங்ஜஸ்டர்களின் ஆதிக்கம் போன்றனவும் ஆபாசமோ வன்முறையோ தலை தூக்காவண்ணம் மிக நுணுக்கமாக கையாளப்பட்டிருப்பதற்காக இயக்குநருக்கு ஒரு சபாஷ்.

ஜமாலும் அவனது சகோதரனும் ரயிலில் செய்யும் திருட்டுக்களும் தாஜ்மகாலுக்கு வரும் வெளிநாட்டவர்களிடம் அவர்கள் தாஜ்மகாலைப்பற்றி விளக்கும் காட்சிகளும் அமிதாப்பச்சனைக்காண ஜமால் மலசல கூடத்துக்குள் குதித்து எழும்புவதும் அழகான நகைச்சுவைகள்.அதேபோல நாயகி விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும்போதும் ஜமாலின் கண்ணெதிரே அவனது சகோதரன் அவளை கற்பழிப்பதும் கண்ணீர்க்காட்சிகள்.தனது காதலியே ஜமாலை உடலுறவுக்கு அழைத்தும் அவன் மறுப்பதும் அவள் விபச்சாரியாக இருந்து திருந்தியவள் என்று தெரிந்தும் தொடர்ந்து அவன் அவளை தேடுவதும் உணர்ச்சிப்பிரவாகம்.

படத்தில் மிக முக்கியமாக சொல்லப்பட வேண்டிய ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மான்.யதார்த்தமாமான கதைக்கு உயிரோட்டமாக இசையமைத்துள்ளார்.கிராமியம் கலந்த சிறுவர்களுக்கு ஒரு விதமாமாகவும் சோகக்காட்சிகளுக்கு இன்னொரு விதமாகவும் மில்லியனர் நிகழ்ச்சிகளில் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விகளுக்கும் வெவ்வேறு விதமாகவும் "மல்டி மியூசிக்கல் சோ" வையே ரஹ்மான் நிகழ்த்திக்காட்டுகிறார்.வெல்

டன் ரஹ்மான்.இதற்காக அவருக்கு "கோல்டன் குளோப்" விருது தகுதியானதுதான்.ஆஸ்காரையும் அவர் வெல்வார் என்று திடமாக நம்பலாம்.

கடைசியாக எவ்வாறு போலீஸ் ஜமாலையை நம்பி விடுதலை செய்கிறது என்பதும் ஜமாலின் காதலுக்கு என்ன நடக்கிறது எனபதும் படத்ததைப்பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.ஆரம்பத்தில் கேட்கப்பட்ட ஜமால் 20 மில்லியனை எப்படி வென்றான் என்ற கேள்விக்கான விடையும் காட்டப்படுகிறது.

மொத்தத்தில் மிக அழகான ஒரு படத்தை பார்த்த திருப்தியை இந்தப்படம் தருகிறது.இரண்டே மணித்தியாலங்களுடன் முடிகின்ற இந்தப்படம் இரண்டு மூன்று நாட்கள் நமக்குள் அதிர்வை ஊற்படுத்துவதே படத்தின் மிகப்பெரிய வெற்றி.இந்திய சினிமாவில் புதியதொரு சகாப்தத்தை தொடக்கி வைத்திருக்கிறது "ஸ்லம்டக் மில்லியனர்".

3 comments:

Tech Shankar said...

Thanks

g said...

///""எனது பார்வையில் "ஸ்லம்டக் மில்லியனர்""///


நல்ல பதிவு

Prapa said...

நல்லாத்தான் பார்த்திருக்கிறீங்க ஷிப்லி படத்த ........
வாழ்த்துக்கள்.
word verification தேவையா, எடுக்கலாமே!