அந்திமாலை பிரசவிக்கும் கவிதைகள்


அந்திமாலைச் சூரியனின்

தேய்ந்து கொண்டிருக்கும் வெம்மை

எதையெல்லாமோ சொல்ல முனைந்து

இறுதியில் எதையுமே சொல்லாமல்

இருட்டின் நிழலுக்காய்

தன்னை விட்டுக்கொடுக்கிறது


தீராத தனிமையின் வலியில்

தனக்குத்தெரிந்த மொழிகளின்

ஊமை வாசகங்களை

அங்கொன்றும் இங்கொன்றுமாய்

பறைசாற்றுகின்றன பறவைகள்


நட்சத்திரக் கண்களினுடே

பூமியைக் கண்காணிக்கத் தொடங்கிவிட்டது

கறுப்பாகிக் கொண்டிருக்கும்

நீல வானம்


வானவெளிப் பரப்பில்

சுவடுபதிக்கும்

காற்றின் மென்சலனமும்

நிர்மூலமாகிக் கொண்டிருக்கிறது..


இரவின் நீண்ட நிழலில்

இளைப்பாறத் தொடங்கியிருக்கின்றன

மரங்களும் ஆறுகளும்


ஒவ்வொரு அந்திமாலையும்

நமக்குள் எழுதிச்செல்லும்

மொழிகளைத் தாண்டிய

கவிதைகள் ஏராளம் ஏராளம்


அவைகளை நாம் வாசிக்கப் போவதில்லை

என்று தெரிந்தும் தினந்தோறும்

அது எழுதிக் கொண்டேயிருக்கிறது

வெவ்வேறு கவிதைகளை

நம்மீது..!-


நிந்தவூர் ஷிப்லி, தென்கிழக்கு பல்கலை, இலங்கை mailto:shibly591@yahoo.com

0 comments: