இருள் சூழ்ந்ததொரு அடர்ந்த வனாந்தரத்தின்
அசையும் ஒரு இலையென
எவர் கண்ணிலும் எட்டுவதாயில்லை
என் கண்ணிலிருந்து உகுக்கும்
பலப்பல கண்ணீர்த்துளிகளும் கனவின் கலைதலும்...

தனிமைத்தீயில் யதேச்சையாய் சிக்குண்ட
என் விதிக்கப்பட்ட கணங்களிலிருந்து
சிக்கிச்சின்னாபின்னமாகி சாம்பலாகிப்போனது
சில நினைவுகளும் அது சார்ந்த நிதர்சனங்களும்...

மழைநாள் மண்வாசமாய்
உயிரின் வேர்ப்பரப்பிலிருந்து
நினைவுகள் நனைக்கும் ஞாபக எச்சங்களின்
எழில் கோலங்கள் மொத்தமும்
முற்றுப் "புள்ளி" என்றாகிப்போன பின்
எதற்கிந்த வேசம்...?எதற்கிந்த சுவாசம்...??

உடைந்து போன புல்லாங்குழல் வழியே
கசியும் ஒரு ஏகாந்த இசையென
காற்றின் சுவடுகள் பற்றி
எங்கெல்லாமோ மிதந்து கொண்டிருக்கிறேன்...

நீளும் திசை வழியே
என் பாதையற்ற பயணம்
கானல் முகங்களில் மோதுண்டு
செய்வறியா பேரதிர்ச்சியுடன்
காகிதக்கப்பலாய் தத்தளிக்கிறது..

சுய கழிவிரக்கம் குறித்தான என்
நிசப்தப்புலம்பல்கள்
ஒரு வசந்தத்தின் பாடலுக்காய்
அழுதபடி தவமிருக்கிறது..

நிர்மூலமான நிகழ்காலத்தின்
மிக மெல்லிய இடுக்குகளில் கசியும்
நம்பிக்கைச்சூரியனும்
மெல்ல மெல்ல ஒளியிழக்கிறது
காலத்தின் கைகள் சுமந்திருக்கும்
இறுகிப்போன விலங்குகளை பார்த்த பின்பு.....

வாழ்வின் துயர் நிறை தருணங்கள்


வாழ்வின் துயர் நிறை

விகார தருணங்கள் மீது எனது ஆயுள்

ஒரு பறவையைப்போல அமர்ந்துகொண்டிருக்கிறது.....

சிறகொடிந்த அப்பறவைக்கு

அடுத்த திசைநோக்கிப்பறக்கும் வீரியம்

துளியேனும் கிடையாது..

விரிந்திருக்கும் வான்பரப்பில்

அதற்கான கனவுகளை மட்டும்

சிறகடிக்க விட்டு விட்டு

தனித்தலையும் ரண மழையில்

கொட்டக்கொட்ட நனைந்து கொண்டிருக்கிறது...

வலி மிகைத்த கவிதையொன்றின்

கண்ணீர் அறைகூவலை

எப்போதும் அதன் சோகம் கவிந்த

கண்களில் நீங்கள் காணக்கூடும்...

மீளமுடியாத

கனவுகளற்ற அதன் வாழ்வியல் கோலங்கள்

தவறாக வாழப்பட்ட

அல்லது

வாழ்தலில் நேர்ந்த தவறாக

ஏதோ ஒரு பிரளயத்தைசாற்றி நிற்கிறது..

வாழ்வின் துயர் நிறை

விகார தருணங்கள் மீது

எனது ஆயுள்

ஒரு பறவையைப்போல அமர்ந்துகொண்டிருக்கிறது


ஷிப்லி

Live interview on Rupavahini Television

May Almighty's peace be upon you,

I was invited by Rupavahini Television for a live
interview on 21st of June 2008.
It Can be watched via following links.

1. http://www.youtube.com/watch?v=yovuJtOW2nE

2.
http://www.youtube.com/watch?v=llKQ5PJUfR8

3.
http://www.youtube.com/watch?v=Q_l9dabJugA

4.
http://www.youtube.com/watch?v=TZsm2A1mKrY

5.
http://www.youtube.com/watch?v=ws7J_nAbZeU

6.
http://www.youtube.com/watch?v=g4eu6a44J7s

7.
http://www.youtube.com/watch?v=8QIeYzjXiwg

8.
http://www.youtube.com/watch?v=OSaEpBkcgRQ

9.
http://www.youtube.com/watch?v=1VLsFJRLI14

10.
http://www.youtube.com/watch?v=9ZWMJzLIT50

or simply go to

http://www.youtube.com/profile_videos?user=amjadfha

to get all ten links in one single page....

Thank you.

Regards from,

Shibly.


01)நினைவுகள்

மெல்ல மெல்லஇருளத்தொடங்கி

எனது சுயம் எங்கோ

விழுங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

அவனது கைத்துப்பாக்கியால்தான்

இது நேர்ந்திருக்கக்கூடும்.

மனைவிக்கு மருந்து வாங்கப்போன

வழியில்தான் இப்படியாயிற்று.

பாவம் எனது இரண்டு வயதுப்பெண்பிள்ளை.

நேற்று ஜோசியக்காரன் சொன்னது நினைவில் விரிகிறது..

"எனக்கு கெட்டியான ஆயுள் ரேகையாம்"


02)அண்மித்துக்கொண்டிருக்கும்

மரணம்

இருதயத்துடிப்பையும்

சுவாசப்பைகளையும்

சதுதியாய் பிடுங்க்துடிக்கிறது.

யார் யாரோவெல்லாம்

என்னைச்சூழ்ந்து புலம்புகிறார்கள்

"தலையில்தான் குண்டு"

"பாவம் இளம் வயது"

"இது நமது குமாரின்...."

"சுட்டவனை யாரேனும் பார்த்தீர்களோ..?"

"அந்தப்பக்கமாய் ஒருத்தன் ஓடினான்"

எனக்காக வாதாடும் குரல்களின்

முகங்களைக்காண முடியாமல்

எனது கண்கள் மூடப்பட்ணுடுவிட்டன.


03)

வாழ்வின் கடைசி நிமிடங்கள்

என்னை குரூரமாய் அணைத்துக்கொள்கிறது.

எனது கடைசி சுவாசத்தை நோக்கி

நானே வேகமாய் விரைகிறேன்.

கைகளும் கால்களும்

அசைவற்ற நிலையின் வாசலில்..

கண்களின் வழியே கண்ணீரும்

உடலின் வழியே இரத்தமும்

கொட்டிக்கொண்டேயிருக்கிறது.

ஒரு மரணத்தை எதிர்கொள்ளும் வலி

இதைப்படிக்கும் உங்களால்

உணரமுடிவது சாத்தியமற்றது.


04)

கடைசியாய் இதயம் துடித்தடங்கிய போது

மனைவியின் முகமும் குழந்தையின்

எதிர்காலமும் கேள்விக்குறியாய் கீறிக்கிழித்தது.

வாழ்வின் கடைசி நிமிட குரூர அணைப்பில்

எனது ஆத்மா கலக்கிறது.

"உயிர் போய்விட்டது"

என்று யாரேனும் அடையாளம் காண்பான்

அதுவரை நானும்

ஒரு அநாதைப்பிணம்


05)

நேற்றுவரை கமகமத்த

என் உடல் வழியே

பிணநெடி வீசத்தொடங்கிவிட்டது..

செத்த பிறகும்கொட்டிக்கொண்டேயிருக்கிறது

குருதியாற்றின் மத்தியில் உடல் மிதக்கிறது படகாய்..

"இனந்தெரியாதோரால்இளம் தகப்பன் படுகொலை"

என நாளை அச்சேறப்போகிறது

பத்திரிகைகளில் எனது மரணம்.

எதற்காக நான் கொல்லப்பட்டேன்?

என்னைச்சுட்டுப்பொசுக்கிய கரம் யாருடையது?

எந்த விடையும் என் போலவே

யாருக்கும் தெரியாது..

எனது ஆத்ம சாந்திக்காக

எல்லோரும் பிரார்த்திப்பார்கள்.

நேற்று யாருக்கோ நிகழ்ந்நதே

இன்று எனக்கு நிகழ்ந்நது..

இன்று எனக்கு நிகழ்ந்ததே

நாளை யாருக்கோ நிகழப்போகிறது

மரணம் என்பது சில்லறையாய்மலிந்து போன இத்தேசத்தில்.....


நிந்தவூர் ஷிப்லி

தென்கிழக்குப்பல்கலை

இலங்கை

ஷிப்லி எழுதிய "நிழல் தேடும் கால்கள்"
கவிதை நூல் வெளியீட்டு விழா


இலங்கை தென்கிழக்குப்பல்கலைக்கழக தமிழ்ச்சங்க வெளியீடாக

நீலாவணன் அரங்கில்

கவிஞர் நிந்தவூர் ஷிப்லி எழுதிய

நிழல் தேடும் கால்கள்(கவிதை நூல்)

இடம் :-கேட்போர் கூடம் தென்கிழக்குப்பல்கலை ஒலுவில் இலங்கை

காலம் :- 2008-04-23 புதன்கிழமை மதியம் 01.30 முதல்

பிரதம அதிதி :- கலாநிதி ஏ.ஜி.ஹீசைன் இஸ்மாயில் உபவேந்தர் தென்கிழக்குப்பல்கலை

அனைவரையும் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கம் வரவேற்கிறது

யாரிடம் போய்ச்சொல்லி அழ...............


யார் செய்த சூழ்ச்சியிது?
யாரிடம் போய்ச்சொல்லுவது?
யாழ் மண்ணின் வீழ்ச்சியினை
யாரிடம் போய்ச்சொல்லுவது?

கனவுகளை காணவில்லை
கண்ணிரண்டில் கண்ணீர் மழை
இடம்பெயர்ந்த நாள் முதலாய்
இன்றுவரை உறக்கமில்லை

உடையிழந்தோம் உறைவிடமிழந்தோம்
உயிர் சுமந்து உணர்விழந்தோம்
உறவிழந்தோம் உணவிழந்தோம்
உடன் பிறந்தோர் பலரிழந்தோம்

புயலழித்த பூவனமாய்
புலமபெயர்ந்தோர் நாமானோம்
உதிர்ந்த விட்ட பூவினிலே
உறைந்து போன தேனானோம்

நிலம் வீடு பிளந்ததம்மா
நூலகமும் எரிந்ததம்மா
பள்ளிகளும் கோயில்களும்
பாழ்நிலமாய்ப்போனதம்மா....

காற்தடங்கள் பதிந்த இடம்
கண்ணிவெடியில் புதைந்ததம்மா
கனிமரங்கள் துளிர்த்த இடம்
கல்லறையாய் போனதம்மா

அங்கொன்றும் இங்கொன்றாய்
உறவெல்லாம் தொலைந்ததம்மா
நிம்மதியின் நிழல் இழந்து
நெடும் பயணம் தொடர்ந்ததம்மா...

அகதி என்ற பெயர் எமக்கு
அறிமுகமாய் ஆனதம்மா
பனிமழையில் நனைந்த வாழ்க்கை
எரிமலையாய்ப்போனதம்மா

யார் செய்த சூழ்ச்சியிது?
யாரிடம் போய்ச்சொல்லுவது?
யாழ் மண்ணின் வீழ்ச்சியினை
யாரிடம் போய்ச்சொல்லுவது?


நிந்தவூர் ஷிப்லி
தென்கிழக்குப்பல்கலை
இலங்கை

இந்த மெல்லிய இரவில்


தூக்கம் இருண்டு போன

இந்த மெல்லிய இரவில்

விழித்திருக்கும்

என் உணர்வுகளைச்சுட்டி

எதைப்பற்றி நான் பாடப்போகிறேன்…?


பாசம், மனசு, நட்பு

எல்லாமே பொய்யாகிவிட்ட

வாழ்க்கையை இனியும் வாழ்ந்து

எதை சாதிக்கப்போகிறது

எனது எதிர்காலம்..


வலிக்கிறது

என் விரல்களும்

இதயமும்..


கருகிப்போன கனவுகளை

மீண்டும் யாசிக்கிறது

என் கண்கள்..

உருகிப்போன நினைவுகளை

மீண்டும் தாகிக்கிறது

என் கணங்கள்…


வலிகளில் நிறைந்து போன

என் விழிகளைப்பற்றி

ரணங்களில் புதைந்து போன

என் ஆத்மார்த்தம் பற்றி

துயரப்பாடல்கள் உச்சரிக்கும்

என் பேனா பற்றி

காயங்களின் சுவடுகளை ஏந்தி நிற்கும்

என் பாவப்பட்ட இதயம் பற்றி

இனிப்பேச யாருமில்லையா…?


உலுக்கி எடுக்கும்

அதிர்வுகளைத் தாங்கி

வாழ்தல் மீதான பயணம் நீள்வது

அத்தனை எளிதில்லை


இனியும் என்ன இருக்கிறது?

சேரத்து வைத்த ஆசைகள்

அநாதையான பின்பும

நம்பியிருந்த உறவுகள்

சுக்கு நு}றான பின்பும்

தேக்கி வைத்த நம்பிக்கை

வேரிழந்த பின்பும்

இனியும் என்ன இருக்கிறது?


காலியாகிப்போன பாசப்பைகளில்

இனி நான் இடப்போவதில்லை

சில்லறை மனிதர்களை..


எல்லா இதயங்களிலும்

போர்வைகள்..

எல்லா முகங்களிலும

முகமூடிகள்..

எல்லா புன்னகைகளிலும்

விஷங்கள்..

எல்லா பார்வைகளிலும்

வக்கிரங்கள்..


உறவென்னும் தேசத்தில்

அகதியாக்கப்பட்டவன் நான்


மனிதர்களைத்தேடிய

என் நித்திய பயணத்தில்

எப்போடு நிகழும் திடீர் திருப்பம்?


யாரையும் குற்றம் சாட்டவில்லை

காரணம்

முதல் குற்றவாளி நான்தானே…?


தூக்கம் இருண்டுபோன

இந்த மெல்லிய இரவில் விழித்திருக்கும்

என் உணர்வுகளைச்சுட்டி

இன்னும் எதைப்பற்றி

நான் பாடப்போகிறேன்…?


ஷிப்லி தென்கிழக்குப்பல்கலை இலங்கை (0094)0716035903


அந்திமாலை பிரசவிக்கும் கவிதைகள்


அந்திமாலைச் சூரியனின்

தேய்ந்து கொண்டிருக்கும் வெம்மை

எதையெல்லாமோ சொல்ல முனைந்து

இறுதியில் எதையுமே சொல்லாமல்

இருட்டின் நிழலுக்காய்

தன்னை விட்டுக்கொடுக்கிறது


தீராத தனிமையின் வலியில்

தனக்குத்தெரிந்த மொழிகளின்

ஊமை வாசகங்களை

அங்கொன்றும் இங்கொன்றுமாய்

பறைசாற்றுகின்றன பறவைகள்


நட்சத்திரக் கண்களினுடே

பூமியைக் கண்காணிக்கத் தொடங்கிவிட்டது

கறுப்பாகிக் கொண்டிருக்கும்

நீல வானம்


வானவெளிப் பரப்பில்

சுவடுபதிக்கும்

காற்றின் மென்சலனமும்

நிர்மூலமாகிக் கொண்டிருக்கிறது..


இரவின் நீண்ட நிழலில்

இளைப்பாறத் தொடங்கியிருக்கின்றன

மரங்களும் ஆறுகளும்


ஒவ்வொரு அந்திமாலையும்

நமக்குள் எழுதிச்செல்லும்

மொழிகளைத் தாண்டிய

கவிதைகள் ஏராளம் ஏராளம்


அவைகளை நாம் வாசிக்கப் போவதில்லை

என்று தெரிந்தும் தினந்தோறும்

அது எழுதிக் கொண்டேயிருக்கிறது

வெவ்வேறு கவிதைகளை

நம்மீது..!-


நிந்தவூர் ஷிப்லி, தென்கிழக்கு பல்கலை, இலங்கை mailto:shibly591@yahoo.com


இன்னொரு பிரிவை நோக்கி


கடைசியில்

நிகழ்ந்தே விட்டது

உன்னோடான

பிரிவும்.......


எதிர்பார்த்ததுதான்

இருந்தும்

இத்தனை

சீக்கிரமா?


நீ

அடிக்கடி சொல்லும்

‘பிறகு சொல்கிறேன்’

என்பதை

சொல்லாமலே

போய்விட்டாய்


திருவிழாவில்

குழந்தையைத் தொலைத்த

தாயொருத்தியின்

பதை பதைப்பும்

அழுகையும்

எனக்கு இன்னும்

சில காலம்தான்......


பிறகு

இன்னொரு

பிரிவை நோக்கிய

உறவின் மீதான பயணம்

இயல்பாகவே நிகழ்ந்துவிடும்


!- நிந்தவூர் ஷிப்லி, தென்கிழக்கு பல்கலை, இலங்கை mailto:shibly591@yahoo.com

ஏமாற்றங்களின் நெடும் பயணம்

தொடரும் ஏமாற்றங்களின்
நெடும் பயணத்தை
மீண்டும் புதுப்பித்திருக்கிறாய்
நீ………..

விடு
குட்டக்குட்ட குனியும்
என் இயலாமையை
சொல்ல வேண்டும்

வரங்களை சாபங்களாக்கிய
தேவதை உனக்காகவா
நான் கடுந்தவம் புரிந்தேன்…?

எனக்கு நிழல் தரும்
என்றெண்ணிய உன்
வார்த்தைகள்
சுட்டெரிக்கும் சூரியனாய்
பொசுக்குகிறது
என்னையும்
மனசையும்…..

பௌர்ணமி வானில்
நீ என்ன
வேண்டுமானாலும்
செய்..
ஆனால்
அமாவாசை வானின்
நட்சத்திரங்களை மட்டும் பிடுங்கி விடாதே…………

-நிந்தவூர் ஷிப்லி தென்கிழக்கு பல்கலை இலங்கை

Captured while maiden book was released...




தொலைதூர அழுகுரல்

பூச்சாண்டி வருவதாக
அன்னை ஊட்டிய
ஒரு பிடிச் சோற்றின்
உயிர்ச்சத்தில்
உதயமானது என் கிராம வாழ்வு

புழுதிக்காற்றின்
மண்வாசனையில்
எத்தனை முறை
நுகர்ந்திருக்கிறேன்
தாய் மண்ணின் சுகந்தத்தை....

மழை நாள் பொழுதுகளில்
தெருவெல்லாம் திரண்டோடும்
அழுக்கு நீரில் கால்
நனைத்து
கழுவியிருக்கிறேன் நினைவுகளை....

நிலாச்சோறு
திருட்டு மாங்காய்
சைக்கிள் விபத்து
முதல் காதல்
இன்னும் எத்தனை நினைவுகள்
என் உயிரோடு ஒட்டியபடி....

அத்தனையும் துறந்து
உலக வரைபடத்தில் மட்டுமே
தாய்நாட்டை காண முடியுமான
ஒரு தேசத்தில் நான்....

பணம் சம்பாதித்துக் கொண்டே
இருக்கிறது
என் உடல்

உயிர் மட்டும்
இன்னும் என் தெருமுனையின்
பனைமரத்தடியில்.....!


நிந்தவூர் ஷிப்லி, தென்கிழக்கு பல்கலை, இலங்கை mailto:shibly591@yahoo.com

வாழ்க்கை

விடையில்லாத
விடுகதை
இது
சில சமயம்
கடல்நீர்
சில சமயம்
கானல் நீர்

இதன் விரல்
நுனியில்தான்
மனிதர்கள்
பொம்மைகள்.....

கனவு,
ஆசை,
காதல்,
பாசம்,
உறவு
பரிவு
என்றெல்லாம்
ஏராளம் ஏராளமமாய்
இதன் பிடியில் முகமூடிகள்
விளையாடு களமாய்,
நாடக மேடையாய்,
களியாட்ட அறையாய்
எப்படியோ
பாவித்தாக வேண்டும் இதை

கருவறையில்
விழித்த பின்
நிஜங்களின் ராஜ்ஜியமாய்...
கல்லறையில்
உறங்குமுன்
போலிகளின் நாட்டியமாய்
இரு முகங்கள் இதற்கு.

ஆயினும்,
சூன்யத்தின் மறுபெயர்தான்
வாழ்க்கை என்பதை
எப்போதுமே உணர்வதில்லை நாம்!
சாகும் பொழுதைத்தவிர......

நிந்தவூர் ஷிப்லி, தென்கிழக்கு பல்கலை, இலங்கை


கருக்கலைப்பு


ஜனனங்களுக்காய்

படைக்கப்பட்ட

கருவறைகள்..

இன்றோ

மரணங்களுக்கான

கல்லறையாய

புதிய பரிமாணம்


உயிரணுக்களின்

உயிர்கள்

அணுவணுவாய்

கொல்லப்படுகிறது

மருத்துவச் சித்ரவதைகளுடன்....


தொப்புள்கொடிகளே

தூக்குக்கயிறுகளாகின்றன

இந்தக்கருக்கலைப்பில்....“


புக்களை தீயிட்டு

எரிப்பதைப்போல”

என்பதை தவிர

வேறெந்த உவமைகளும்

பொருந்தப் போவதில்லை

இந்த அகால மரணங்களுக்கு...


மனிதாபிமானம்

செத்துப்போய்விட்டதை

பகிரங்கமாய் பறைசாற்றுவதற்கா

சிசுக்கொலைகள்...?


உண்டான பிறகு

சிதைப்பதை விட்டுவிட்டு

உண்டாகும் முன்

சிந்தியுங்கள்

ஏனெனில்நீங்கள்

சிதைப்பது உயிர்களை அல்ல

இவ்வுலகின்

நாளைய விடிவை !


நிந்தவூர் ஷிப்லி



இருட்டு உலகம்



தனிமையின்
நிழலில்
பெருமூச்செறிந்தபடி
வெறிச்சோடிக் கிடக்கிறது
வாழ்க்கை

விடிய முன்னும்
விடிந்த பின்னும்
துயரங்களை
சுவாசித்து
சொட்டுச் சொட்டாய்
உயிரிழக்கிறது
வாழ்தல் மீதான
நம்பிக்கை

வலிகளின்
பிடிமானங்களில்
கவனமாய் செருக்கப்பட்டிருக்கிறது
உடலும், உயிரும்.....

நிலவு தொலைந்த
இருட்டு உலகாய்
இன்னும் புலப்படாமல்
மனிதர்கள்

நிறைவேறாத
ஆசைகளின்
நீள்வட்டப் பாதையில்
தறிகெட்டுத் தவிக்கின்றன
நகரும் வினாடிகள்

விழிநீரின்
விம்பங்களில்
அப்பட்டமாய்த் தெரிகின்றன
புன்னகைகளின்
புதைகுழிகள்

குற்றுயிரின் உளறலாய்
விளங்கவும் முடியாமல்
விலக்கவும் தெரியாமல்
உணர்வு என்ற பெயரில்
சில ஊசல்கள்.....

நீளும் ரணங்களின்
அழுத்தத்தில் புதைந்து
இன்னுமின்னும்
உயிர்வாழ
எனக்கு விருப்பமில்லை
மரணத்தின் திசைநோக்கி
நடக்கிறேன்

மிக மிகத்
தொலைவில்
என்னை வரவேற்றுக்
காத்திருக்கிறது அது!

நிந்தவூர் ஷிப்லி, தென்கிழக்கு பல்கலை, இலங்கை

அர்த்தமில்லாத அவஸ்தைகள்

உனதுகண்ணீரில்
நனைந்து போனது
எனது மனசு

இருவரதும்இறுக்கத்தை
அதிகப்படுத்தும்
அல்லதுகுறைக்கும்
நம் மௌனங்கள்
கண்ணீரிலா முடிய வேண்டும்?

தனிமையில்
நம் பிரிவின் வலிகளில்
நான் வடிக்கும்கவிதைகளில்
நிறையவே பொதிந்துகிடக்கின்றன
சில கண்ணீர்த்துளிகளும்
சில இரத்தத்துளிகளும்

நினைவுகளை
பின்னோக்கிநகர்த்திவிட்டு
இனி ஒரு போதும்
நிகழ முடியாதஅந்த நாட்களில்
புதைந்து கிடக்கிறேன்

வசந்த காலஇலைச் சருகின்
முனகலும்
மயான வெளியில்
பறவைகளின்அலறலும்
சிந்தனையின்வெற்றிடத்தை
நிரப்பிக் கொண்டிருக்கின்றன

நீ பற்றியஞாபகங்கள்
நொந்துபோன
மனசின் பரப்புகளில்
அர்த்தமில்லாத அவஸ்தைகளாய்
கனக்கின்றன

ஒரே ஒரு கேள்வி
அகால மரணமாய்
திடீரெனச் செத்துப்போனதே
நம் உறவு

எப்படி
நேர்ந்தது
அது?