01)நினைவுகள்

மெல்ல மெல்லஇருளத்தொடங்கி

எனது சுயம் எங்கோ

விழுங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

அவனது கைத்துப்பாக்கியால்தான்

இது நேர்ந்திருக்கக்கூடும்.

மனைவிக்கு மருந்து வாங்கப்போன

வழியில்தான் இப்படியாயிற்று.

பாவம் எனது இரண்டு வயதுப்பெண்பிள்ளை.

நேற்று ஜோசியக்காரன் சொன்னது நினைவில் விரிகிறது..

"எனக்கு கெட்டியான ஆயுள் ரேகையாம்"


02)அண்மித்துக்கொண்டிருக்கும்

மரணம்

இருதயத்துடிப்பையும்

சுவாசப்பைகளையும்

சதுதியாய் பிடுங்க்துடிக்கிறது.

யார் யாரோவெல்லாம்

என்னைச்சூழ்ந்து புலம்புகிறார்கள்

"தலையில்தான் குண்டு"

"பாவம் இளம் வயது"

"இது நமது குமாரின்...."

"சுட்டவனை யாரேனும் பார்த்தீர்களோ..?"

"அந்தப்பக்கமாய் ஒருத்தன் ஓடினான்"

எனக்காக வாதாடும் குரல்களின்

முகங்களைக்காண முடியாமல்

எனது கண்கள் மூடப்பட்ணுடுவிட்டன.


03)

வாழ்வின் கடைசி நிமிடங்கள்

என்னை குரூரமாய் அணைத்துக்கொள்கிறது.

எனது கடைசி சுவாசத்தை நோக்கி

நானே வேகமாய் விரைகிறேன்.

கைகளும் கால்களும்

அசைவற்ற நிலையின் வாசலில்..

கண்களின் வழியே கண்ணீரும்

உடலின் வழியே இரத்தமும்

கொட்டிக்கொண்டேயிருக்கிறது.

ஒரு மரணத்தை எதிர்கொள்ளும் வலி

இதைப்படிக்கும் உங்களால்

உணரமுடிவது சாத்தியமற்றது.


04)

கடைசியாய் இதயம் துடித்தடங்கிய போது

மனைவியின் முகமும் குழந்தையின்

எதிர்காலமும் கேள்விக்குறியாய் கீறிக்கிழித்தது.

வாழ்வின் கடைசி நிமிட குரூர அணைப்பில்

எனது ஆத்மா கலக்கிறது.

"உயிர் போய்விட்டது"

என்று யாரேனும் அடையாளம் காண்பான்

அதுவரை நானும்

ஒரு அநாதைப்பிணம்


05)

நேற்றுவரை கமகமத்த

என் உடல் வழியே

பிணநெடி வீசத்தொடங்கிவிட்டது..

செத்த பிறகும்கொட்டிக்கொண்டேயிருக்கிறது

குருதியாற்றின் மத்தியில் உடல் மிதக்கிறது படகாய்..

"இனந்தெரியாதோரால்இளம் தகப்பன் படுகொலை"

என நாளை அச்சேறப்போகிறது

பத்திரிகைகளில் எனது மரணம்.

எதற்காக நான் கொல்லப்பட்டேன்?

என்னைச்சுட்டுப்பொசுக்கிய கரம் யாருடையது?

எந்த விடையும் என் போலவே

யாருக்கும் தெரியாது..

எனது ஆத்ம சாந்திக்காக

எல்லோரும் பிரார்த்திப்பார்கள்.

நேற்று யாருக்கோ நிகழ்ந்நதே

இன்று எனக்கு நிகழ்ந்நது..

இன்று எனக்கு நிகழ்ந்ததே

நாளை யாருக்கோ நிகழப்போகிறது

மரணம் என்பது சில்லறையாய்மலிந்து போன இத்தேசத்தில்.....


நிந்தவூர் ஷிப்லி

தென்கிழக்குப்பல்கலை

இலங்கை

3 comments:

ஜெ.நம்பிராஜன் said...

மரணம் ஒரு வெறிநாயைப் போன்று ஒவ்வொருவரின் காலருகினிலும் காத்துக் கிடக்கிறது. நாய்களின் வேலையை மனிதர்களும்(?) எடுத்துக் கொள்வதே வேதனையளிக்கிறது. வார்ப்புவில் தொடர்ந்து தம்பியின் கவிதைகளை வாசித்து வருகிறேன். வெகுநாட்கள் கழித்து பிளாக்கிற்கு வருகிறேன். முகப்பு அருமை. கவிதைகளும் கண்ணீரை வரவழைக்கின்றன.

Anonymous said...

Excellent !!!!!!!!

Awesome !!!!!!!!

Best of luck.......

Unknown said...

// நேற்று யாருக்கோ நிகழ்ந்நதே

இன்று எனக்கு நிகழ்ந்நது..

இன்று எனக்கு நிகழ்ந்ததே

நாளை யாருக்கோ நிகழப்போகிறது //

நிதரிசனம்.. வெகு நிதரிசனம்..