தொலைதூர அழுகுரல்
பூச்சாண்டி வருவதாக
அன்னை ஊட்டிய
ஒரு பிடிச் சோற்றின்
உயிர்ச்சத்தில்
உதயமானது என் கிராம வாழ்வு
புழுதிக்காற்றின்
மண்வாசனையில்
எத்தனை முறை
நுகர்ந்திருக்கிறேன்
தாய் மண்ணின் சுகந்தத்தை....
மழை நாள் பொழுதுகளில்
தெருவெல்லாம் திரண்டோடும்
அழுக்கு நீரில் கால்
நனைத்து
நனைத்து
கழுவியிருக்கிறேன் நினைவுகளை....
நிலாச்சோறு
திருட்டு மாங்காய்
சைக்கிள் விபத்து
முதல் காதல்
இன்னும் எத்தனை நினைவுகள்
இன்னும் எத்தனை நினைவுகள்
என் உயிரோடு ஒட்டியபடி....
அத்தனையும் துறந்து
உலக வரைபடத்தில் மட்டுமே
தாய்நாட்டை காண முடியுமான
ஒரு தேசத்தில் நான்....
பணம் சம்பாதித்துக் கொண்டே
இருக்கிறது
என் உடல்
உயிர் மட்டும்
இன்னும் என் தெருமுனையின்
பனைமரத்தடியில்.....!
நிந்தவூர் ஷிப்லி, தென்கிழக்கு பல்கலை, இலங்கை mailto:shibly591@yahoo.com
4 comments:
eLimaiyaana aanaal uyirppaana kavithai.
vaazththukkaL.
அன்புத் தம்பி Nintavur shibly அவர்களே,
உங்களின் கவிதைகளில் கவிநயமும், கருத்தும் இரண்டறக் கலந்திருப்பதை மிக எளிதில் அறிந்திட முடிகிறது. கவிதைகளில் கருத்து இருப்பது ஒரு கூடுதல் சிறப்பே என்பதே எனது கருத்து. உங்களின் அடுத்த கவிதைப் புத்தகம் விரைவில் வெளிவர நீங்கள் வணங்கும் அல்லா துணையருள்வார் என வாழ்த்தி மகிழ்கிறேன்.
அன்புடன்,
ஜான், செயலாளர் - வாசிங்டன் தமிழ்ச் சங்கம்
ஷிப்லி
இணையத்தினூடாக உங்களைக் காண்பது மகிழ்ச்சியாக உள்ளது.
உங்கள் எழுத்தில் இன்னும் ஆழமாய்த் தடம் பதிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
வலிகளை எதிர்ப்போரும் உணரும்படியான வார்த்தை வடிப்பு தென்படுகிறது ஸிப்லியின் எழுத்துக்களில்.பாராட்டுக்கள்
Post a Comment